ஜப்பான் நிறுவனத்தின் கடன் அனுமதி கிடைத்தவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துத் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் மத்திய அரசிடம் தகவல் கோரி இருந்தார்.
அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், மதுரையில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
முதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கான பணிகள் HITES நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்புள்ளி வழங்குவதற்கு முந்தைய பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமையின் கடன் அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுக் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலம் 45 மாதங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.