திருநெல்வேலியில் புதிதாகத் தொடங்கப்பட்ட செல்போன் கடையில் ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாசை வாங்கப் பொதுமக்கள் திரண்டனர். தனிநபர் இடைவெளியை மறந்து கூட்டம் கூடியதால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பில் அலங்கார் செல்போன் கடையின் 6 - வது கிளை நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்கவிழாவையொட்டி ஆறு நாட்களுக்கு முதலில் கடைக்கு வரும் 100 நபர்களுக்கு, ஹெட்போன், டெம்பர் கிளாஸ் உள்ளிட்டவை 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடை திறப்பு விழாவையொட்டி சுவரொட்டிகள் அடித்து விளம்பரம் செய்தனர் அலங்கார் செல்போன் கடை நிர்வாகத்தினர்.
ஆறு ரூபாய்க்கு ஹெட்போன், டெம்பர் கிளாஸ் கிடைக்கிறது என்ற அறிவிப்பைப் பார்த்ததும் நூற்றுக்கணக்கானோர் கொரோனாவையும் மறந்து ஆஃபரில் கிடைக்கும் ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாசை வாங்கக் கடைக்கு முன் திரண்டனர். தகவல் அறிந்த போலிசார் சம்பவ இடத்துக்கு உடனே வந்து கூட்டத்தைக் கலைத்தனர். தனி நபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல் கடைக்கு முன் அதிகளவு கூட்டத்தைக் கூட்டியதற்காகக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு மட்டுமல்லாமல், கொரோனா வைரசைப் பரப்பும் விதத்தில் செயல்பட்டதால் அந்தக் கடைக்குச் சீல் வைத்துவிட்டுச் சென்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.