ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படுவதுடன், ஆபாச தளங்களும் குறுக்கிடுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
இதில் இன்று நடந்த விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உலகம் முழுவதுமே ஆன்லைன் மூலம் தான் தற்போது வகுப்புகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மலைப் பகுதியில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது என வினவினர்.
ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது அவர்களுக்கு எப்படி பாடங்கள் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், வருகிற 27ம்தேதி விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.