தொலை நோக்கு சிந்தனையுடன்அறிவிக்கப்பட்டு உள்ள "ஒரே தேசம் - ஒரே தேர்வு" என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒருபக்கம் வரவேற்பும், மறுபுறம் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இந்த திட்டம், தமிழக தேர்வர்களுக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது குறித்து அலசுகிறது இந்த சிறப்புச் செய்தி தொகுப்பு : -
ஒரே தேசம் - ஒரே ரேஷன், ஒரே தேசம் - ஒரே அடையாள அட்டை உள்ளிட்ட சில பல திட்டங்களைத் தொடர்ந்து, புதிதாக ஒரே தேசம் - ஒரே தேர்வு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, N.R.A என அழைக்கப்படும் தேசிய ஆள் தேர்வு முகமை மூலம் மத்திய அரசு பணி யாளர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு - அதாவது, Common Eligibility Test என்ற அடிப் படையில் தேர்வு நடத்தப்படும்.
இந்த புதிய நடைமுறையை வரவேற்றுள்ள கல்வியாளர்கள், தமிழ்மொழி உள்ளிட்ட 12 மாநில மொழி களிலும் இத்தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் கட்டாயம் மத்திய அரசு பணிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த தேர்வினால் TNPSC, TRB, TNUSRB போன்ற மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முதல் நிலை தேர்வை மட்டுமே NRA என்ற புதிய அமைப்பு நடத்தும். இரண்டாம் நிலைத் தேர்வை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட துறையே நடத்தும் என்பதால் தனித்தனி பாடத்திட்டங்களும், கூடுதலான பாடங்களும் படிக்க வேண்டிய நிலை தேர்வர்களுக்கு ஏற்படும் என மற்றொரு பிரிவினர், கவலை தெரிவிக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட துறை தான் இரண்டாம் நிலைத் தேர்வை நடத்தும் என்பதால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்விகள் கேட்கப்படாது என அச்சம் தெரிவித்த தனியார் பயிற்சியாளர்கள், மீண்டும் தேர்வர்கள் பாதிக்கப்படும் நிலைதான் தொடரும் என சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதிகாரத்தை மையப்படுத்தும் முயற்சி இது என குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், இதன் மூலமாக தமிழக இடங்களை வடமாநில தேர்வர்கள் தட்டிப்பறிப்பார்கள் என அச்சம் தெரிவித்துள்ளன.
எனவே, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.