விநாயகர் சதுர்த்திக்கு பின் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை மொத்தமாக சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடவும், அவற்றை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியளித்தனர்.
மேலும் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில் வாயில்களில் வைத்து விட்டு செல்லவும் அனுமதி வழங்கினர். அதே சமயம் பொது இடத்தில் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறினால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை அறநிலைய துறையே சேகரித்து கரைக்க அனுமதிக்க கோரி தமிழக அரசுத்தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், கோவில்களில் வைக்கப்படும் சிலைகளை அறநிலையத் துறையினர் சேகரித்து நீர்நிலைகளில் கரைக்க உத்தரவிட்டனர்.