நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 130 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 14.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இதேபோல, 137.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 130 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதேபோல, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 19,132 பயனாளிகளுக்கு 91.26 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப அரசு கடுமையாகப் போராடி வருகிறது என அப்போது குறிப்பிட்ட முதலமைச்சர், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்றார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 68 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.