காவல் துறையின் கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ கூடாது என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர்கள் தினகரன் மற்றும் அருண் ஆகியோர் தலைமையில் 41 இந்து அமைப்புகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இந்த வருடம் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தக் கூடாது என காவல் துறையினர் அப்போது அறிவுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பு பிரதிநிதிகள் திடீரென வெளிநடப்பு செய்தனர்.