கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பலர் சிக்கி உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனையடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் குணமடைய இறைவனிடம் வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் 3 லட்ச ரூபாய் என்கிற அளவில் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் நேரடி வாரிசுதாரர்களுக்கு வழங்கவும், பலத்த காயமடைந்தோருக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.