ஆறு மாதமாகச் செயல்பாடு இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு இடவில்லை எனத் தமிழ்நாடு கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியரின் வங்கிக் கணக்கு 6 மாதங்களுக்கு எந்தச் செயல்பாடுமின்றி இருந்தால், அதுபற்றி ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியிடம் வங்கி தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தக் கணக்குக்கு ஓய்வூதியம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கருவூல விதி உள்ளது.
அதன்படி 6 மாதங்களாகச் செயல்பாடு இல்லாத ஓய்வூதியக் கணக்குகளின் பட்டியலைத் தயாரிக்கக் கருவூல அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இது குறித்து ஓய்வூதியர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில், 6 மாதமாகச் செயல்பாடில்லாக் கணக்குகள் குறித்து கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தியுள்ளதாகவும், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்பதும், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பதும் தவறான புரிதல் என்றும் கருவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.