விநாயகர் சதுர்த்தியின்போது தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியே மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு விதித்துள்ள தடை உத்தரவால் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் நிலவுவதாகவும், காகிதக் கூழில் செய்யப்பட்ட சிலைகள் என்பதால் அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்த முடியாது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்டுள்ள தடையை மீற முற்படும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.