கனரக வாகனங்களில் குறிப்பிட்ட இரு நிறுவனங்களில் இருந்து மட்டுமே ஒளிரும் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டினால் மட்டும்தான் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படுமென நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கூறியதால், லாரி உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் கனரக வாகனங்களில் முகப்பு பகுதியில் வெள்ளை நிறத்திலும் , பக்கவாட்டில் இருபுறமும் மஞ்சள் நிறத்திலும் ,பின்புறம் சிவப்பு நிறத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படுவது வழக்கமானது.
இந்த நிலையில் , நாமக்கல்லில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தகுதி சான்றிதல் பெற உரிமையாளர்கள் கொண்டு வந்தனர். அப்போது அமெரிக்காவைச் 3எம் அல்லது டெல்லி நிறுவனமான ஏவரி ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கப்பட்ட ஒளிரும் ஸ்டிக்கர்கள் வாங்கி ஒட்டப்பட்டிருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் அளிக்கப்படும். அதற்கான, சான்றிதழை எங்களிடத்தில் காட்ட வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
லாரி உரிமையாளர்கள் ஏற்கெனவே ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறோம் என்று கூறினாலும், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்பட்டு அதற்கான பில்லை எங்களிடத்தில் காட்டினால் மட்டுமே தகுதி சான்றிதழ் கிடைக்கும் என்று உறுதிபட அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
ஆண்டுக்கு ஒருமுறை கனரக வாகனங்கள் சம்பந்தபட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன தகுதி சான்றிளதழ் கட்டாயம் பெற வேண்டும் என்பது விதி. இனி மீண்டும் புதியதாக ஸ்டிக்கர் ஒட்ட வேண்டுமென்றால் ஒவ்வொரு கனரக வாகனத்திற்கு ரூ, 5000 முதல் 8, 000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டி நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழகத்திலுள்ள சுமார் 4.50 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. டீசல் விலை, சுங்க கட்டணம் உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் இப்படியும் எங்கள் வயிற்றில் அடிக்கின்றனர் என்று லாரி உரிமையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.