திண்டுக்கல், பொன்னகரம் அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டுக்குள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 - ம் தேதி காலை 6 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் இன்னோவா காரில் வந்து சிபிஐ அதிகாரிகள் என்று கூறி ரெய்டு நடத்தினர்.
அப்போது காளீஸ்வரன் பீரோ சாவி தன்னிடம் இல்லை என்றும் தனது மனைவியிடம் உள்ளது என்று கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த அங்கன் வாடிக்குச் சென்ற மர்ம நபர்கள் காளீஸ்வரனின் மனைவி அருணாதேவியை அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி பீரோவைத் திறக்கவைத்தனர்.
பீரோவில் இருந்த லட்சக்கணக்கான ரொக்கப் பணம், நூறு சவரனுக்கும் அதிகமான தங்க நகை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை விசாரணை செய்வதாகக் கூறி எடுத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரன் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலிசார் நடத்திய விசாரணையில் தான் அவர்கள் மோசடி பேர்வழி என்பது தெரியவந்தது. ஒரு வருடமாக இந்த விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் திருப்பூரில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே, தனிப்படை போலிசார் விரைந்து சென்றதில் கோபி, மாலதி, வினோத், ஐய்யப்பராஜன், முத்துக்குமார் மற்றும் குகன்செட்டி உள்ளிட்ட ஆறு பேரை பிடித்துக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலிசார் விசாரித்ததில் ஆறு பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், சுமார் 100 சவரன் தங்க நகைகள், வாகனங்கள், ஐந்து லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
அரசு மதுபானக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்க்கும் காளீஸ்வரன் கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது எப்படி என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தக் கொள்ளை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.