தமிழகத்தில் கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் தொற்று அல்லாத 5கோடிக்கும் அதிகமானோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று அல்லாத நோயாளிகளுக்கும் அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும், மார்ச் 2020 முதல் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5,09,02,183 பேர் புறநோயாளிகளாகவும் 27,30,864 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு மருத்துவமனைகள், சேவை மையங்களில் 3,78,256 பிரசவங்களும் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.