கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 9000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் வரை ரேசன் கடைகளில் விநியோகிக்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை விடுவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 65 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில் அதற்கு சுமார் 5 கோடி ரூபாய் நாள்தோறும் செலவாகிறது என்றும், பிசிஆர் சோதனைகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உயர்தர வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும், நவம்பர் வரை ரேசனில் விநியோகிக்க 55 ஆயிரத்து 637 டன் துவரம் பருப்பை விடுவிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்புக்கு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 512.64 கோடி ரூபாய் இரு தவணைகளாக வந்துள்ளது, இந்த தொகையை 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும், வரிவருவாய் குறைந்ததால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்டவும், கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும் 9 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும், ஏப்ரல்-ஜூன் காலகட்டத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும், மாநில பேரிடர் மீட்பு நிதி தீர்ந்துவிட்ட நிலையில், கொரோனா தடுப்புக்காக மத்திய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும், நெல்கொள்முதலுக்கு உதவும் வகையில், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கான மானியமாக 1321 கோடியை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும், பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்தார். சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மீட்சிக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கியின் சிறப்பு தொகுப்பு மூலம், தமிழநாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கு 1000 கோடி ரூபாய் வழங்க, SIDBI வங்கிக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.