மூணார் அருகே பெட்டிமுடியில் நடந்த நிலச்சரிவில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இறந்து போனார்கள். தொழிலாளர்கள் பலியான இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நாய் ஒன்று தன்னை பாசத்துடன் வளர்த்தவர்களை பரிதவிப்புடன் தேடி வருகிறது.
கேரள மாநிலம் மூணார் அருகே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெட்டிமுடி மலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் , கடந்த 7- ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் சரிந்து மண்ணில் புதைந்தன. கிட்டத்தட்ட 78 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 40 பேர் பலியாகினர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி தெரியவில்லை.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக அங்கு மீட்புப்பணி நடந்து கொண்டிருக்கும் போது நாய் ஒன்று அங்கேயும் இங்கேயும் சுற்றி தன்னை பாசத்துடன் வளர்த்தவர்களை பரிதவிப்புடன் தேடி வருகிறது. அந்த நாயின் கண்களில் ஒரு வித சோகம் தெரிகிறது. நிலச்சரிவு நடந்த இடத்தில் கிடக்கும் துணிகளை மோப்பம் பிடித்து தன்னை வளர்த்தவர்கள் இருக்கிறார்களா என்று அறிய அது முயன்று வருகிறது. அதற்கு யாரும் உணவு அளித்தாலும் அது சாப்பிட மறுப்பபதாக சொல்கிறார்கள். பல வருடங்களான தன்னை அன்புடன் வளர்த்தவர்களை திடீரென்று காணாமல் போனதால், அந்த நாய் சோகத்துடன் அங்கே சுற்றி திரிவதாக மீட்புப்படையினர் கூறுகின்றனர்.