மாநகராட்சி பகுதிகளிலும் சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் வரும் 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேபோல, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வரும் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.