தாமிரபரணி - கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்புத்திட்டம் 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இ-பாஸ் தற்போதைக்கு ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில், 208.30கோடி ரூபாய் மதிப்பிட்டில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 31.04 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நடந்து முடிந்த 19 திட்டபணிகளை தொடங்கிவைத்தார்.
5982 பயனாளிகளுக்கு 36.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . அதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கொரோனா பாதித்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்றார்.
குடிமராமத்து திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர், தாமிரபரணியாறு , நம்பியாறு மற்றும் கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்டம் திட்டம் 2021ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்றார்.
இ பாஸை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய முதலமைச்சர், அதற்காக கூடுதலாக ஒரு குழு செயல்படும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கொரோனா நோய் தாக்கம் முழுமையாக குறைந்தபின் பொதுப்போக்குவரத்து தொடங்கும் என்றும் அதன் பின்னர் இ பாஸ் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வென்று அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் திருத்த சட்டம், புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் முடிவுகளை எடுக்க வல்லுனர் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.