கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், சுமார் அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்தவருமான கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
கொரோனா பேரிடர் காரணமாக பேரணி நடத்தப்படாத நிலையில் மெரீனா கடற்கரை சாலையில், திமுக தொண்டர்கள் அக்கட்சி கொடியை ஏந்தி, சமூக இடைவெளி விட்டு நின்றிருந்தனர்.
முதலில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், பின்னர் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞரின் சாதனைகளை விளக்கும் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மருத்துவர்களுக்கு சிறப்பு செய்து, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு கலைஞர் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கும் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கலைஞர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
திமுக எம்.பி. கனிமொழி, அவரது குடும்பத்தினருடன் சென்று கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.