மதுரை, திருமங்கலம் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் இராஜராஜசோழன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சிறப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதைப் போன்றே மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் சமீபகாலமாக பல்வேறு தொல்லியல் எச்சங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி பகுதியில் உள்ளது செங்கமேடு. இந்தப் பகுதியில் உள்ள பழமையான சத்திரம் ஒன்றைக் கண்டறிந்த வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சத்திரத்தின் சுவர்களிலும், அருகில் உள்ள கிணற்றின் சுவர்களிலும் இராஜராஜசோழனின் கல்வெட்டுகள் மற்றும் பழங்கால தமிழ் வட்டெழுத்துக்களைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனீஸ்வரன், “தூணில் உள்ள கல்வெட்டு ஒன்று ‘அரஹா’ என்று தொடங்குகிறது. அரஹா என்பதை சமஸ்கிருதத்தில் உள்ள அருகன் என் கொண்டால் இந்தப் பகுதி சமணப்பள்ளியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 24 - வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமும் இங்குக் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.
இந்த சிற்பம் மூன்றடி உயரம், இரண்டு அகலத்தில் உள்ளது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல், சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளதாகவும், இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். பொதுவாக இயக்கிகளுடனே மகாவீரர் சிலை வடிக்கப்படும். ஆனால், இரண்டு பக்கமும் இயக்கர்களுடன் உள்ள இந்த மகாவீரர் சிலை அபூர்வமானதாகும். இந்தப் பகுதியில் ஏராளமா சிதைந்த கட்டிடங்களின் செங்கல் குவியல்களும் பானை ஓடுகளும் சிதறிக் கிடக்கின்றன. இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.