தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கோவை மாவட்ட மலை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி,திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் நிலைமை கட்டுக்குள் தான் இருப்பதாக கூறிய அமைச்சர், அங்கு ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவும் சரிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.