தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 189 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் தங்களுக்கு தேவையான மதுவை வாங்க குடிமகன்கள் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிகம் திரண்டனர். இதனால் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது.
இதற்கடுத்து திருச்சி மண்டலத்தில் 42 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 40 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 21 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 18ம் தேதி 183 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.