தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் நிலையங்களை தவிர்த்து அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தை போல் ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தொடர்ந்து 5வது ஞாயிற்றுக்கிழமையாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்களை தவிர்த்து, காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.
ஆள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும், வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
சேலம்
தளர்வற்ற முழு ஊரடங்கால் சேலத்தில் கடைகள், உழவர் சந்தைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி புறவழிச்சாலைகள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலும் குறைந்திருந்தது.
கோவை
கோவையில் முழு ஊரடங்கையொட்டி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேம்பாலங்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளன. காவல்துறையினர் 2,500 பேர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை
தளர்வற்ற முழு ஊரடங்கால் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், தெற்குவாசல், சிம்மக்கல், நெல்பேட்டை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கால் வள்ளியூர், ஏர்வாடி, களக்காடு, அம்பாசமுத்திரத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு, சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சென்னை
சென்னையில் தளர்வற்ற முழு ஊரடங்கால் அனைத்து வித கடைகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில், போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்லும் போதும், அவற்றை சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர். ஜெமினி மேம்பாலம் பகுதியில் தேவையின்றி வெளியே வந்த இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அபராதமும் விதித்தனர்.