தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி.. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்த விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. மறுநாள் ஊருக்கு திரும்பிய புதுமணதம்பதியை ஊர் கூட்டம் நடத்தி 3 மாதத்தில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்து பெண்ணை, அவரது பெற்றோர் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
ஊரடங்கை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிபோட்ட நிலையில் ஊரடங்கால் பெங்களூரில் பார்த்து வந்த காய்கறி வியாபாரம் மற்றும் சிப்ஸ் கடையை விஜியால் நடத்த இயலாத நிலை ஏற்பட்டு வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்துள்ளார்.
இருந்தாலும் தனது காதல் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு, ராஜேஸ்வரியின் தந்தையிடம் விஜி கேட்டு வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் என்று கூறி 31ஆம் தேதி ராஜேஸ்வரியின் தந்தை விஜியை அழைத்ததாக சொல்லப்படுகிறது.
மறுநாள் பாலகோடு அருகே விஜி, மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில் சாலையோரம் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். யாரோ மர்ம நபர்கள் அவரை கொலை செய்து சாலையோரம் வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.
விஜியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் விஜி அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள் விஜியின் சடலத்தை கண்டு கதறி அழுதனர்...
காதலியின் தந்தை முனிராஜிடம் காவல்துறையினர் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.