முதலமைச்சர் உத்தரவின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கஷாயம், கடுக்கய் உள்ளிட்ட 27 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயனம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இவற்றை காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். இம்மருந்துகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.