பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடவுளின் கட்டளைக்கு மனிதன் கீழ்ப்படிவதன் அடையாளமாக பக்ரீத் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புனித நாளில் தாராளம், சகிப்புத் தன்மை, இரக்கம் ஆகிய தெய்வீக நற்பண்புகளை நிலைநிறுத்த அனைவரும் தீர்மானிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனத்தில் நிறுத்தி அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துவதால் இது மனிதநேயத் திருவிழா எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுப்பூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட ஒரு பொன்னாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்துச் செய்தியில், போற்றுதலுக்குரிய பக்ரீத் திருநாளில் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பும் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டிக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.