கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் வரும் 29ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் நாள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலில் 7 நாட்களும், பிறகு 14 நாட்களும் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு அதன்பின் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது. சென்னையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாமா என்பது குறித்து வரும் 29ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம், அதைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை முதலமைச்சர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.