தமிழகம் முழுவதும் தொடர்ந்து 4வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஏற்கனவே வந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து மாநிலம் தழுவிய தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அந்தவகையில் இம்மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்படுகின்றன. காய்கறி, மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகளும் ஆள்நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
சென்னையில் தளர்வற்ற முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், மருந்தகங்கள், பால் நிலையங்களை தவிர்த்து அனைத்து வித கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 193 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரும் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் தமிழக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநிலங்களிலிருந்தும் தேவையின்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அனுமதி மறுக்கப்பட்டதால் மாநில எல்லைப் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், ஈரோடு மாவட்டம் முழுவதும் 136 சோதனை சாவடிகள் அமைத்து 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 37 மணி நேரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகளும் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், நாகை மாவட்டத்தில் இன்று மருந்து கடைகள், பாலகங்கள் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் முதல் ஆட்டோக்கள் வரை எந்த வாகனங்களும் ஓடாததால் நாகை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியுள்ளது.
தேனியில் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் 100 சதவீதம் ஆதரவளித்து வெளியே வராமல் உள்ளனர். இதனால் தேனியின் அனைத்து பகுதிகளும் ஆள் அரவமின்றி பேரமைதியுடன் காணப்படுகிறது.
முழு ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில் மருந்தகங்கள், பாலகங்கள் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தேவையின்றி சாலையில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நாமக்கல்லில் முழு ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு தலா 100 ரூபாய் போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றியும் மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது. தேவையின்றி சுற்றித்திரிவோரை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.