தமிழ்நாட்டில், 3ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில், 6,988 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்தை கடந்துள்ளது. வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், கோவையைச் சேர்ந்த 96 வயது முதியவர் உள்பட 89 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நாளில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதால், தனிநபர் பரிசோதனை எண்ணிக்கை, 22 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில், இன்று ஒரே நாளில், 1,329 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், பெருநகரில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 93,537ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உட்பட 7 ஆயிரத்து 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 449 பேரும், காஞ்சிபுரத்தில் 442 நபர்களும், திருவள்ளூரில் 385 பேருக்கும், வைரஸ் தொற்று உறுதி ஆனது.
இதுதவிர, விருதுநகரில் 376 பேருக்கும், தூத்துக்குடியில் 317 பேர், மதுரையில் 301 நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 659 பேர், கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.