தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் தேர்வு இல்லை என்பதால், சில வீடுகளில் உள்ள சுட்டிகள், படிக்காமல் ஆசிரியரை மட்டுமல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடமும் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
நடிகர் திலகம் இல்லையென்ற குறையைப் போக்கும் அளவுக்கு அழுது பெர்ஃபாமன்ஸ் கொடுக்கும் இந்த சுட்டிப்பையன், ஆன் லைன் மூலம் கல்வி கற்றுவரும் நம்ம ஊர் வாண்டு..!
ஏற்கனவே முந்தின நாள் வகுப்புப் படத்தை முடிக்காமல், அழுது அவகாசம் வாங்கிய இந்த பொடியன், அசராமல் அடுத்த நாளுக்கும் சேர்த்து வகுப்பு பாடத்தை எழுதாமல் இருக்க, தாயிடம் கையெடுத்து கும்பிட்டு அனுதாபம் பெற முயலும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
எங்கே தாயின் கையில் வைத்திருக்கிற குச்சி தன் உடலில் குறி சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் இரு தினங்களுக்குரிய வகுப்புப் பாடத்தையும் சகோதரியுடன் சேர்த்து முடிப்பதாக வாக்குறுதி அளித்து தாயிடம் இருந்து சாதுர்யமாக தப்புகிறான் இந்த சிறுவன்.
ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்திவிட்டு, பள்ளிகள் திறக்கப்படாததால் தினமும் வீட்டிலேயே செல்போன் மற்றும் கனிணி முன்பு அமர்ந்து பிள்ளையோடு சேர்ந்து கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் நம்ம ஊர் தாய்க்குலங்கள்..!
சில கெட்டிக்கார பிள்ளைகள் வேகமாக கற்றுக் கொள்ள, சுட்டித்தனமான பிள்ளைகளிடம், ஆசிரியர்கள் மட்டுமல்ல தாயாரும் சிக்கிக் கொள்வது வீடுதோறும் அரங்கேறும் அக்கப்போர் காட்சியாக மாறி வருகின்றது.