பரோலில் வரும் கைதிகளின் பாதுகாப்புக்குச் செல்லும் காவல்துறையினர், பணம் வாங்குவது குறித்து தெரியவந்தால் துறைரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரின் பரோல் மனு குறித்த விசாரணையின் போது இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், பரோலில் வரும் கைதிகளிடம் காவலர்கள் பணம் பெறக் கூடாது என்பதை உறுதி செய்யும்படி சிறைத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டனர்.
பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க தவறும்பட்சத்தில் கைதிகளின் சட்டப் போராட்டங்களுக்கு ஏற்படும் செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.