தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத வகையில், பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 5,210 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழக கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய உச்சமாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம், இதுவரை வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 26 வயது இளைஞர் ஒருவரும், 94 வயது முதியவர் ஒருவரும் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் 96 வயது முதியவர் உள்பட மொத்தம் 88 பேர் வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதனால், தனிநபர் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 21 லட்சத்து 58 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
வைரஸ் தொற்றில் பாதிப்பிலிருந்து, மேலும் 5 ஆயிரத்து 210 பேர் மீண்டுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது.