ஒருநாள் விசாரணை முடிந்ததை அடுத்துச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்போரூர் அருகே செங்காட்டில் நிலத்தகராறில், துப்பாக்கிச் சூடு, மோதல் தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இதயவர்மனை ஒருநாள் காவலில் விசாரிக்கச் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதையடுத்துச் செங்காட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு இதயவர்மனை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையொட்டி அங்குச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எப்படித் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பதை விளக்க எம்எல்ஏவைச் செங்காட்டில் வைத்து போலீசார் நடித்துக் காட்டச் செய்தனர்.
இதயவர்மன் வீட்டில் ஏற்கெனவே நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வேட்டையாடும் துப்பாக்கியில் பயன்படுத்தும் 4 கிலோ ஈயக் குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாகவும் எம்எல்ஏ இதயவர்மனிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்களும் இதயவர்மனின் அலுவலகம், குடோன் ஆகியவற்றில் ஆய்வில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான வெடிகள் கைப்பற்றப்பட்டன.