மின் கட்டண கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் மின் கட்டண அளவீடு செய்யப்படாததால், முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதை இரண்டு இரு மாதங்களுக்கு என பிரித்து வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, தமிழக அரசின் மின் கணக்கீட்டு நடைமுறையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.