தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை எனும் புதிய முறையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நோடல் அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 21 மாவட்டங்களில்,
ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்படி pooled test எனும் குழு பரிசோதனை முறையில் பரிசோதனைகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே நேரத்தில் பரிசோதனை செய்யும் முறைக்கு குழு பரிசோதனை என பெயர். இந்த முறை மூலம் 10 பேருக்கும் ஒரே நேரத்தில் முடிவுகள் கிடைப்பதோடு, தொற்று இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டும் மீண்டும் தனியாக பரிசோதனை செய்யப்படும்.
இந்த புதிய முறையால் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். பரிசோதனைகளை அதிகரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்து வரும் நிலையில், குழு பரிசோதனை முறையை தமிழக அரசு தொடங்க உள்ளது.