திருப்போரூர் அருகே செங்காட்டில் நிலத்தகராறு தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இதயவர்மனை ஒருநாள் காவலில் விசாரிக்கச் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்துச் செங்காட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு இதயவர்மனை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்எல்ஏ விசாரணைக்கு வருவதை முன்னிட்டு செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், செங்கல்பட்டு கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராம், மாமல்லபுரம் கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எப்படித் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்பதை விளக்க எம்எல்ஏவை செங்காட்டில் வைத்து போலீசார் நடித்துக் காட்டச் செய்தனர்.
இதயவர்மன் வீட்டில் ஏற்கெனவே நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வேட்டையாடும் துப்பாக்கியில் பயன்படுத்தும் 4 கிலோ ஈயக் குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மேலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி குண்டு செய்யும் எந்திரம் போன்ற அமைப்பும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் மீண்டும் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கப் பத்துக்கு மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்களும் இதயவர்மனின் அலுவலகம், குடோன் ஆகியவற்றில் ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள் தொடர்பாக எம்எல்ஏவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் வைத்து துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுள்ளது. இதனிடையே சோதனையின் போது பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான வெடிகள் கைப்பற்றப்பட்டன.
பகல் ஒரு மணிக்குச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இதயவர்மனை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் நண்பகல் வரை விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.