தமிழகத்தில் மேலும் 4965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டி விட்டது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 4965 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 75 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 27 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 48 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றை கண்டறிய தமிழகத்தில் உள்ள 113 ஆய்வங்களில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நோய் தொற்றில் இருந்து மேலும் 4894 பேர் மீண்டுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 51 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.