பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழிற்கல்வி பட்டப் படிப்புக்களின் இறுதி பருவத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தற்போதைய சூழலில் கொரோனா பாதிப்பு தணிந்து கல்லூரிகள் வரும் ஜனவரி தான் திறக்க முடியும் என கூறியுள்ளார்.
தேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதால், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.