கொரோனா பரவலைத் தடுக்க ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடற்கரைப் புண்ணியத் தலங்கள், ஆற்றங்கரைப் படித்துறைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் கடற்கரைகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர், ஈரோடு மாவட்டம் பவானிக் கூடுதுறை, திருச்சி திருவரங்கம் காவிரிப் படித்துறை, கும்பகோணம் மகாமகக் குளம், காவிரிப் படித்துறை ஆகியவற்றில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
காவிரியாற்றின் முதன்மையான படித்துறைகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு வரும் பொதுமக்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.