60 முதல் 95 வயது வரை உள்ளவர்களுக்கு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதில் பிசிஜி தடுப்பூசி உதவுமா என்ற ஆய்வை ஐசிஎம்ஆரின் உதவியுடன் சென்னையில் உள்ள ஐசிஎம்ஆரின் தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகம், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் தமிழக அரசு பொது சுகாதார துறை ஆகியன நடத்த உள்ளன.
கொரோனா பரவல் அதிகமாக உள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், குறிப்பிட்ட ஹாட்ஸ்பாட்டுகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு அந்த ஆய்வு நடத்தப்படும் என ஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் துறை இயக்குநர் சுபாஷ் பாபு, குழந்தைகளிடம் சுவாச நோய் எதிர்ப்பை பிசிஜி தடுப்பூசி உருவாக்கும் என்பதன் அடிப்படையில் வயதானவர்களிடம் இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு தொற்றையும், இறப்பு விகித த்தையும் குறைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.