தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்கக்கூடாது என்றும் 20ஆம் தேதி முதல் ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் , அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காலை முதலே தனியார் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கின.
இதனால் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக சேர்ந்தது. இதனையடுத்து, தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், முழுக்க முழுக்க ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆன்-லைன் வழியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.