தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை, மாலையில் விவரங்களை வெளியிட்டது. இதன்படி, இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 4 ஆயிரத்து 549 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 69 பேர் உயிரிழந்ததால், கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 236ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 45 ஆயிரத்து 888ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 17 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.
ஒரே நாளில் 5 ஆயிரத்து 100 பேருக்கு மேல் குணம் அடைந்ததால், கொரோனா சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்தை தாண்டி விட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.