தமிழகத்தில் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிகளவு மாணவ - மாணவிகள் பாஸ் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் ஈரோடு, கோவை மாவட்டங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. வழக்கமாக தேர்வு முடிவுகள் மே மாத தொடகத்திலேயே வெளியிடப்படும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 92.3 சதவிகிதமாக இருந்தது. தமிழ்நாட்டிலேயே திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிகளவு மாணவ மாணவிகள் பாஸாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.12 சதவிகிதம் ஆகும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,'' திருப்பூர் மாவட்டத்தில் 111 பள்ளிகளில் ஆல்பாஸ் ஆகியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 23, 398 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். திருப்பூர் மாவட்டம் சாதனை படைக்க காரணமாக இருந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் '' என்றார்.