ஊரடங்கு காலகட்டமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில், புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மும்பையில் உள்ள Projects Today என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாதம் மட்டும் தமிழக அரசு 17 புதிய முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளைப் பொறுத்தவரை, நாட்டின் டாப் டென் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும், உத்தரப் பிரதேசம் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மொத்தம் 97 ஆயிரத்து 859 கோடி முதலீட்டுக்கான ஆயிரத்து 241 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதே நேரம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி ரூபாய் மதிப்பிலான 2500 புதிய முதலீட்டுத் திட்டங்கள் கையெழுத்தானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் நாடு ஊரடங்கு கால கட்டத்தில் இருந்தாலும் இந்த அளவுக்கு புதிய முதலீடுகள் வந்திருப்பது தமிழகம் தொழில் வளர்ச்சியில் நல்ல அறிகுறியை காட்டுவதாக கூறப்படுகிறது.