கொரோனா அச்சத்தால் முகக்கவசங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட நிலையில், கோவையை சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளார் ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளில் முகக்கவசங்களை தயாரித்து அசத்தி வருகிறார்.
கோவை துடியலூரில் நகைப்பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், ஆர்டரின் பேரில் நகைகளை செய்து கொடுப்பது மட்டுமின்றி அவ்வப்போது வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதும் வழக்கம். அந்த வகையில் கொரோனா காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளியில் முகக்கவசங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மில்லி மீட்டர் அளவுக்கு மெல்லிய கம்பியாக மாற்றி 4 லேயர்களாக முகக்கவசங்களை தயாரிக்கும் அவர், ஒரு வார காலத்தில் கைகளாலேயே முகக்கவசங்களை தயாரித்து விடுகிறார். 46 கிராம் எடையிலான தங்க முகக்கவசங்களுக்கு 2.75 லட்சமும், 40 கிராம் எடையிலான வெள்ளி முகக்கவசங்களுக்கு 15 ஆயிரமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தங்கத்தில் சட்டை, தலைப்பாகை, உள்ளிட்டவற்றை வடிவமைத்து சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.