தமிழகத்தில் மேலும் 4526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
புதிதாக 4,526 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று கூடியதால் 106 ஆக அதிகரித்துள்ளது. அதில் 50 சதவீத ஆய்வங்கள் தனியார் வசம் உள்ளவையாகும். ஒரே நாளில் 41 ஆயிரத்து 357 மாதிரிகள் அந்த ஆய்வங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 4,743 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்து விட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பாதிப்பால் சென்னையை சேர்ந்த 18 பேர், திருச்சியை சேர்ந்த 6 பேர் உள்பட மேலும் 67 பேர் பலியாகினர்.
அவர்களில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 50 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்தம் 2 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.