பெரம்பலூர் அருகே வெடிவைத்த கிணற்றுக்குள் இறங்கிய இளைஞரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணிகளின் போது வெடிவைக்கப்பட்ட கிணற்றுக்குள் ஊற்று தோன்றியதா என பார்க்க இறங்கிய ராதாகிருஷ்ணன் என்ற இளைஞரும், அவரை மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ராஜ்குமாரும் வெடிமருந்து நெடியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், உரிய அனுமதி பெறாமல் கிணற்றை ஆழப்படுத்திய உரிமையாளர் முருகேசன், கிணற்றில் வெடிமருந்துகளை வெடிக்கச் செய்த லட்சுமணன் மற்றும் சட்ட விரோதமாக வெடிமருந்துகளை விற்பனை செய்த அசோகன் ஆகிய மூவரை கைது செய்தனர்.
தொடர்ந்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அசோக்பிரசாத் முன்பு ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். இதனிடையே பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.