சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், ஏற்கனவே இவ்வழக்கில் கைதான 5 போலீசாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐயின் மனுவில் குறிப்பிடப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள், முத்துராஜ், முருகன் ஆகியோர், மதுரை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சிபிஐ அதிகாரிகள் தவிர வேறு யாரும் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அப்போது கைது செய்யப்பட்ட 5 போலீசாரையும் காவலில் எடுத்தால் தான் முழுமையான விசாரணை நடத்த முடியும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி தொடர்ந்து 5 போலீசாரிடமும் சிபிஐ காவலுக்கு செல்ல சம்மதமா என கேள்வி எழுப்பினார். அதற்கு 5 பேரும் ஆட்சேபம் இல்லை என பதில் அளித்தனர். அதே சமயம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர், சிபிஐ விசாரணையின் போது தங்களது வழக்கறிஞர்களை உடன் அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதனை கேட்ட நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை 80 சதவீத விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், எனவே 5 நாட்கள் சிபிஐ காவல் தேவை இல்லை எனவும் தெரிவித்து, 2 நாட்கள் மட்டும் சிபிஐ காவலுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷுக்கு, சிபிஐ காவலில் இருக்கும் 2 நாட்களுக்கும் தினமும் ஒரு மணி நேரம் தங்கள் வழக்கறிஞர்களை சந்தித்து பேசவும் அனுமதி வழங்கினார். 2 நாள் காவல் முடிந்து 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் 5 பேரும் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5 பேருக்கும் உடல்நலம், கொரோனா உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு வைத்து சாத்தான் குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் அழைத்துவரப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். நாளை காலை 5 போலீசாரையும் சாத்தான்குளத்தில் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.