தமிழகத்தில் கொஞ்சம் குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்த சுமார் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், " டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 13 பேர், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 21 பேர் உள்பட தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 244 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால், கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து 38 ஆயிரத்தைத் தாண்டியது.
ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 16 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 617 பேர் குணம் அடைந்ததால், "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 89 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் 32 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 68 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். 6 பெண்கள் உள்பட 25 பேர் தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். ஈரோட்டில் 33 வயது இளைஞர் மற்றும் 14 பெண்கள் உள்பட 43 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இறந்தனர். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர் பலி , ஆயிரத்து 966 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை சுமார் 7 ஆயிரம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை பொறுத்தவரை, சுமார் 17 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.