திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், முக்கிய எதிரிகளான முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று, 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், திருவாரூரைச் சேர்ந்த முருகன் அவனது சகோதரி கனகவல்லி, மணிகண்டன், கணேசன், முருகனின் மைத்துனர் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த ஆய்வாளர் கோசலை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 25 பேரை சாட்சிகளாகக் கொண்டு, முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
முருகன் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததால் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்றும், இருப்பினும் முருகன் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும் வகையில் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.