சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் 8 பேரைக் கொண்ட குழு, தூத்துக்குடி சென்றுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், 18 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழு விசாரிக்கிறது. இதில் சென்னையில் இருந்து 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, மதுரைக்கு கார்களில் முதலில் வந்தது. அக்குழு மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது.
இதேபோல், டெல்லியிலிருந்து ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விமானத்தில் மதுரைக்கு இன்று மதியம் வந்தது. பின்னர் 8 பேரும், 3 கார்களில் அங்கிருந்து தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் அருகே உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களிடம் சிறிது நேரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், வழக்கு விசாரணை ஆவணங்களை அளிக்கவுள்ளார்.
இதனிடையே, சாத்தான்குளம் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட லத்தி, ரத்தக்கறை படிந்த துணிகள் போன்ற ஆதாரங்கள், தடயங்கள் ஆகியவை தூத்துக்குடியிலுள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும், அங்கிருந்து கொண்டு வரப்பட்டு, மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன.